Jaggubhai turns out to be Makkubhai – review in Tamil

Jaggubhai

நடிப்பு: சரத்குமார், ஸ்ரேயா, கவுண்டமணி

இசை: ரஃபி

ஒளிப்பதிவு: ஆர் டி ராஜசேகர்

இயக்கம்: கேஎஸ் ரவிக்குமார்

தயாரிப்பு: ராடான் – ஜீ

கதை, காட்சிகள் என எதுவுமே தெரியாவிட்டாலும், சில படங்களின் தலைப்பு, அந்தப் படம் குறித்த நமது எண்ணம் எதுவும் ஆரம்பத்திலிருந்தே சரியானதாக இருக்காது. படம் பார்க்கும்போது நம் நினைப்பு 100 சதவிகிதம் சரி என்று புரியும்… ஜக்குபாய் விஷயத்தில் அது மீண்டும் ஒருமுறை நிரூபணமானது.

சென்னையை கிரிமினல்கள் இல்லாத நகரமாக்கப் பாடுபடும் (விஜய் ஏரியாவாச்சே!) போலீஸ் அதிகாரி சரத்குமார். இதற்காக அவர் எந்த அளவு கொடூரமான, சட்டத்துக்கு விரோதமான நடவடிக்கையையும் கூட எடுக்கத் தயங்க மாட்டார். ஒரு வழக்கு விஷயமாக ஆஸ்திரேலியாவுக்குப் ரோகிறார். அப்போதுதான் ஸ்ரிஷாவை காதலிக்கிறார். நெருக்கமான உறவு கொள்கிறார்… பின்னர் இருவரும் பிரிந்து விடுகிறார்கள்.

ரொம்ப நாள் கழித்து ஸ்ரிஷா ஆஸ்திரேலிய கார் விபத்தில் செத்துப் போகிறார், ஒரு உயில் எழுதி வைத்துவிட்டு. விஷயம் கேள்விப்பட்டு ஆஸ்திரேலியா போகும் சரத்துக்கு ஒரு அதிர்ச்சி… அவருக்கும் ஸ்ரிஷாவுக்கும் ஏற்பட்ட உறவில் மோனிஷா என்ற மகள் பிறந்து இப்போது டீனேஜ் பெண்ணாக நிற்கும் உண்மை தெரிகிறது.

ஜெகன்னாதனின் பழைய எதிரி ஒருவனால் மோனிஷாவின் உயிருக்கே ஆபத்து என்பதை அறிந்து, அந்த போராபத்திலிருந்து மகளைக் காப்பாற்ற ஆஸ்திரேலிய எம்ஐபி போலீஸ் கவுண்டமணி துணையுடன் புறப்படுகிறார்.

இக்கட்டிலிருந்து மகளை அவர் எப்படி காப்பாற்றுகிறார் என்பது மீதிக் கதை.

சரத்குமார் உண்மையிலேயே இந்த வேடத்துக்குப் பொருத்தமாகத்தான் இருக்கிறார். குறை சொல்ல முடியாத நடிப்பையும் தந்துள்ளார்.

படத்தின் இன்னொரு ஹீரோ கவுண்டமணி. குரலில் இன்னும் அதே நக்கல், நையாண்டி, கெத்தான எகத்தாளம்… முக்கியமாக அதே சவுண்டு. ஆனால் விறுவிறுப்பில்லாத திரைக்கதையால், கவுண்டரின் அசத்தலான காமெடி கூட காணாமல் போகிறது.

ஸ்ரேயா இதில் அழகாக உடையணிந்து வருகிறார்… ஆங்காங்கே நடிக்கவும் செய்கிறார். சரத்தின் ஜோடி ஸ்ரிஷா சொல்லிக் கொள்ளும் அளவு இல்லை…

ஆர்டி ராஜசேகர் அசத்தியிருக்கிறார், ஒளிப்பதிவில். குறிப்பாக அந்த ஷாப்பிங் மாலில் சரத் போடும் அட்டகாசமான சண்டையில் விளையாடியுள்ளது கேமரா.

ஆனால் ரபியின் இசை படத்துக்கு கொஞ்சமும் கை கொடுக்கவில்ல

படத்தை முடிக்க இவ்வளவு அவகாசம் எடுத்த ரவிக்குமார், கைவசம் உள்ள மசாலாவையாவது சுவையான விருந்தாகத் தந்திருக்கலாம்… ஆனால் இருபது வருடங்களுக்கு முந்தைய சென்டிமெண்ட் காட்சிகளை வைத்து படுத்துகிறார்.

படம் பார்த்துவிட்டு வெளியில் வரும் ரசிகர்கள் மக்குபாய் மக்குபாய் என்று திட்டிக் கொண்டே வருகிறார்கள்… சரத்குமார் மனம் நொந்தாலும், பணம் கொடுத்து படம் பார்த்த அந்த ரசிகர்கள் சொல்வதில் கணிசமாக உண்மை இருக்கிறது!

திருட்டு விசிடி எங்கேயெல்லாம் இருக்கிறது என்பதைக் கண்டறிவதில் காட்டிய அக்கறையை இந்தப் படத்தில் நல்ல திரைக் கதையிருக்கிறதா என்பதைத் தேடுவதிலும் காட்டியிருக்கலாம் சரத்குமார் அண்ட் கோ!

Advertisements

Leave a Reply