விருதுகளை அள்ளும் ஜேம்ஸ் கேமரூனின் அவதார்!

தொடர்ந்து 5 வாரங்களாக உலகின் நம்பர் ஒன் படமாகத் திகழ்ந்துவரும் ஜேம்ஸ் கேமரூனின் அவதார் படத்துக்கு இரண்டு கோல்டன் குளோப் விருதுகள் கிடைத்துள்ளன.

ஹாலிவுட்டின் பெவர்லி ஹில்ஸில் நடந்த வண்ணமிகு விழாவில், அவதார் சிறந்த படமாகவும் , இந்தப் படத்தின் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் சிறந்த இயக்குநராகவும் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன.

சர்வதேச அளவில் திரைக் கலைஞர்களுக்கு அளிக்கப்படும் விருதுகளில் ஆஸ்கருக்கு அடுத்த மிகப் பெரிய விருது கோல்டன் குளோப். ஆஸ்கருக்கு செல்வதன் நுழைவாயில் என்றுகூட இந்த விருதுகளை வர்ணிக்கிறார்கள்.

ஹாலிவுட் சினிமா செய்திகளை வெளியிடும் வெளிநாட்டு பத்திரிகைகளில் பணிபுரியும் பத்திரிகையாளர்கள் சங்கம் இந்த விருதுகளை வழங்குகிறது. இந்த சங்கத்தில் 90 பத்திரிகையாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்த விருது வழங்கு விழாவில் சிறந்த படமாக அவதார் படம் தேர்ந்து எடுக்கப்பட்டது. இந்த படத்தை இயக்கிய ஜேம்ஸ் காமரூன் சிறந்த இயக்குநராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதுவரை 1.65 பில்லியன் டாலர்கள் குவித்துள்ள அவதார், பாக்ஸ் ஆபீஸ் வரலாற்றில் புதிய சாதனையைப் படைத்துள்ளது. 12 ஆண்டுகளில் டைட்டானிக் குவித்த 1.8 பில்லியன் டாலர் என்ற சாதனை அளவை அடுத்த வாரமே மிஞ்சிவிடும் என்கிறார்கள் சர்வதேச திரை விமர்சகர்கள்.

இந்த நிலையில் ஆஸ்கர் விருது போட்டியில் பல பிரிவுகளில் அவதார் படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் கேமரூனின் டைட்டானிக் 11 ஆஸ்கர் விருதுகளை அள்ளியது குறிப்பிடத்தக்கது.

சிறந்த நடிகர் ஜெப் பிரிட்ஜஸ்…

சிறந்த நடிகருக்கான விருது, கிரேசி ஹார்ட் படத்தில் நடித்த ஜெப் பிரிட்ஜஸ்க்கு கிடைத்து உள்ளது. சிறந்த நடிகைக்கான விருது, தி பிளைண்டு சைடு படத்தில் நடித்த சாண்ட்ரா புல்லாக்-குக்கு கிடைத்துள்ளது.

சிறந்த காமெடி படமாக ‘தி ஹேங்க்ஓவர்’ படத்துக்கு கிடைத்து உள்ளது. சிறந்த காமெடி நடிகராக ஷெர்லாக் ஹோம்ஸ் படத்தில் நடித்த ராபர்ட் டவுனி தேர்வு செய்யப்பட்டார். காமெடி நடிகையாக மெரில் ஸ்ட்ரிப் தேர்வு பெற்று உள்ளார். இவர் ஜுலி ஜுலியா படத்தில் நடித்தவர்.

சிறந்த வெளிநாட்டு படம் தி ஒயிட் ரிப்பன்…

சிறந்த அனிமேஷன் படமாக ‘அப்’ தேர்வு செய்யப்பட்டு உள்ளது. சிறந்த வெளிநாட்டு படமாக ஜெர்மனியில் தயாரான ‘தி ஒயிட் ரிப்பன்’ தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

சிறந்த திரைக்கதைக்கான விருது ஜேசன் ரீட்மேன், ஷெல்டன் டர்னர் ஆகியோருக்கு கிடைத்து உள்ளது. இவர்கள் இருவரும் ‘அப் இன் தி ஏர்’ என்ற படத்துக்கு திரைக்கதை அமைத்தவர்கள்.

சிறந்த இசை அமைப்பாளராக மைக்கேல் கியாச்சினோ தேர்வு பெற்று இருக்கிறார். படம்: அப் இன் தி ஏர்.

சிறந்த டி.வி. தொடராக மேட் மென் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளது.

மார்டின் ஸ்கார்சீஸ்…

வாழ்நாள் சாதனையாளருக்கான சிசில் பி டெமில் (டென் கமாண்ட்மெண்ட்ஸ், சாம்சன் அண்ட் டெலைலா படங்களின் இயக்குநர்) விருதினை பிரபல இயக்குநர் மார்டின் ஸ்கார்சீஸ் (கேங்க்ஸ் ஆப் நியூயார்க், ஏவியேட்டர் போன்ற படங்களைத் தந்தவர்) பெற்றார்.

Advertisements

Leave a Reply