நடிகர் சூர்யா வீட்டில் ரொக்கம், சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன!

சூர்யா, கேஎஸ் ரவிக்குமார் வீடுகளில் அதிரடி சோதனை!

சென்னை: நடிகர்கள் சூர்யா, விஜயகுமார், வடிவேலு மற்றும் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் வீடுகளில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். 8 மணி நேரத்துக்கும் மேலாக நடந்து வரும் இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் சாலிகிராமம் வீட்டிலும் சோதனை நடந்தது. அதே நேரம் மதுரையில் உள்ள அவரது வீட்டிலும் ஒரே நேரத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நடிகர்கள் அனைவரது அலுவலகங்களிலும் சோதனை நடந்தது.
சென்னை தி.நகரில் உள்ள சூர்யாவின் வீட்டிலும் அடையாறில் உள்ள அவரது பங்களாவிலும் வருமான வரித்துறை ரெய்ட் நடந்து வருகிறது.
காலை 7 மணிக்கு முன்பே தொடங்கிய ரெய்ட் நள்ளிரவு வரை நீடித்தது. சில இடங்களில் இன்னும் ரெய்ட் முடியவில்லை.
சூர்யாவின் தம்பி கார்த்தியும் இந்த சோதனையின்போது உடன் இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டனர். அவர் ஆயிரத்தில் ஒருவன் பட விழாவில் பங்கேற்கவிருந்தார். பின்னர் அந்த விழாவை ரத்து செய்துவிட்டு உடனிருந்தார்.
சூர்யாவின் உறவினரும், படத் தயாரிப்பாளருமான ஞானவேல் ராஜா, அகரம் பவுண்டேஷனில் உள்ள முன்னாள் பத்திரிகையாளர் ஒருவர் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.
சக்தி மசாலா நிறுவனத்திலும்…
சக்தி மசாலா நிறுவனத்தைச் சேர்ந்தவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது.
எதற்காக இந்த ரெய்டு?
இந்த ரெய்டுக்கு உள்ளான அனைவருமே நடிகர் சூர்யாவுக்கு நெருக்கமானவர்கள், அவருடன் இணைந்து படங்களில் பணியாற்றியவர்கள்.குறிப்பாக ஆதவன் படத்தில் சூர்யாவுடன் இணைந்தவர்கள் கேஎஸ் ரவிக்குமார் மற்றும் வடிவேலு. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் வீட்டிலும் ரெய்டு என்று முதலில் கூறப்பட்டு, பின் அதே வேகத்தில் அது தவறான தகவல் என்று மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அகரம் பவுண்டேஷன் – சக்தி மசாலா இணைந்து மாணவர்கள் கல்விக்காக ரூ 1 கோடி திட்டத்தை பொங்கல் அன்று விஜய் டிவியில் அறிவித்திருந்தது நினைவிருக்கலாம். இந்த அறிவிப்பு வெளியாகி 4 நாட்களுக்குப் பின் வருமான வரி சோதனை நடந்துள்ளது.
இதுகுறித்து வருமான வரித் துறை அதிகாரிகள் கூறியதாவது:
திரையுலக பிரமுகர்கள் சிலர் வருமான வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருப்பதாக எங்களுக்கு, நம்பகமான புலனாய்வுத் தகவல்கள் கிடைத்தன. அதன் அடிப்படையில் இந்த ரெய்டு நடத்தப்பட்டது. மேலும் தொழிலதிபர்களின் கறுப்புப் பணத்தை அறக்கட்டளைகள் என்ற பெயரில் வெள்ளையாக்கும் முயற்சியும் நடப்பதாகத் தெரிகிறது.
இதில் சூர்யா, வடிவேலு, ரவிக்குமார், முருகதாஸ் மற்றும் ஒரு பைனான்சியர் வீடு, அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டோம். வருமான வரித்துறை உதவி இயக்குனர்கள் இரண்டு பேர் தலைமையிலான குழுவினர், இந்த சோதனையை நடத்தினர். ஆதவன் திரைப்படத்துக்கும், இந்த சோதனைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எந்தத் தனி மனிதரையும் குறிவைத்து ரெய்டு நடத்தப்படவில்லை. எங்களுக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் மட்டுமே நடத்தப்பட்டது. சோதனைக்கு உள்ளான அனைவருமே நல்ல ஒத்துழைப்பு கொடுத்தனர்.
ரெய்டு நடந்த இடங்களில் இருந்து ரொக்கம், நகைகள் மற்றும் பல கோடி ரூபாய்க்கான சொத்து ஆவணங்கள் கைப்பற்றியிருக்கிறோம். ஏராளமான முதலீட்டு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றின் உண்மைத்தன்மை மற்றும் வரி ஏய்ப்பு விவரங்கள் பற்றி ஆராய்ந்து வருகிறோம். இந்த சோதனை, சில இடங்களில் புதன்கிழமை வரை நீடிக்கும்…” என்றனர்.
மதுரையில் வடிவேலு வீட்டில் சோதனை நடந்தபோது அவர் அங்குதான் இருந்தாராம். சோதனைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்த வடிவேலு, அதிகாரிகள் கிளம்பிச் சென்ற பிறகு சென்னை திரும்பியுள்ளார்.

Advertisements

3 Comments

Leave a Reply